இசைமாமணி” “இசைச் சுடரொளி” “குறள் இசைச்செல்வர்”
மாணிக்கம் யோகேஸ்வரன்
மாணிக்கம் யோகேஸ்வரன் தமிழ் இசையிலும் கர்நாடக இசையிலும் மட்டுமல்லாது மேலைத்தேய இசையிலும் உலகெங்கும் பிரசித்தமான இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் கலைஞராவர். இவரது குரு தென்னிந்திய இசை மேதை “பத்மபூஷண்” “சங்கீத கலாநிதி” திரு தி வி கோபால்கிருஷ்ணன் ஆவார். இவரது ஆரம்ப கால இசை ஆசிரியர்கள் “சங்கீத பூசணம்” திரு எஸ் பாலசிங்கம் அவர்களும், “சங்கீத பூசணம்” திரு ப முத்துக்குமாரசாமி அவர்களும் ஆவர்.
திரு யோகேஸ்வரன், பி பி சி இன் வருடாந்த இசை விழா (BBC Proms) முதல் சென்னையில் நடைபெறும் மார்கழி இசைவிழா வரை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் உலகெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் கலைஞர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானிய மஹாராணியாரின் ஜுபிலி விழாவில் தமிழில் பாடிய பெருமைக்கும் உரியவர் ஆவர்.
ஸ்ரான்லி கியூபிறிக் (Stanley Kubrick) அவர்களுடைய தயாரிப்பான ஐஸ் வைட் சட் “Eyes Wide Shut” – 1999 ஹாலிவூட் திரைப்படத்தில் தமிழில் பாடியதன் மூலம் ஹாலிவூட்டில் பாடிய முதல் தமிழர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து ஹாலிவூட்டின் உன்னத இயக்குனர் ஸ்பைக் லீ (Spike Lee) அவர்களின் “25th Hour” எனும் திரைப்படத்திலும் மற்றும் பிரித்தானிய தயாரிப்பான “Brick Lane” ஆகிய திரப்படங்களிலும் பாடி மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
உலகெங்கும் பல மேலைத்தேய இசை நிகழ்ச்சிகளில் பாடி வரும் யோகேஸ்வரன், இவ்வருடம் மே மாதத்தில் நோர்வேயின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 200 வது வருட நிறைவைக் கொண்டாடும் ஓபெரா நிகழ்ச்சியில் பாடிய போது நோர்வே நாட்டு மன்னரின் பாராட்டுகளும் அவரது விருந்து உபசாரமும் கிடக்கப்பெற்று தமிழினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
உலகப்பொதுமறையாகிய திருக்குறளை 133 இராகங்களில் பாடி ஒலிப்பேழை வெளியிட்டது மட்டுமல்லாது திருக்குறளை பல மேடைகளிலும், ஒளி/ஒலிப்பதிவுகளிலும் பாடி வருகிறார். ஈழத்தில் அமைதிக்காக இவர் உருவாக்கி வெளியிட்ட பீஸ் போர் பரடைஸ் “Peace for Paradise” – 1995 எனும் ஒலிப்பேழை கடந்த 2005ம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. சூனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் “life goes on” எனும் காணொளி, Unicef அமைப்பினால் உள்வாங்கப் பெற்று அவ்வமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்பட்டது.
யோகேஸ்வரனின் குரல், இலண்டன் முதல் பல ஐரோப்பிய மாநகரங்களிலும், இந்தியா, இலங்கை, சீனா, அமெரிக்கா, ஆபிரிக்கா, மலேசியா, மத்திய ஆசியா, சேர்பியா, ரூசியா, ஸ்கண்டினேவியா, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கச்சேரி மேடைகளிலும், மேலைத்தேய கலாச்சார விழா மேடைகளிலும், பரதநாட்டிய, மிருதங்க அரங்கேற்ற மேடைகளிலும் ஒலிப்பதை இசை உலகம் அறியும். (www.myogeswaran.com)